இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாடு -ஓர் அறிமுகம்


இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாட்டினை விளங்க முன் இஸ்லாத்துடன் தொடர்பான சில அடிப்படை உண்மைகளை புரிந்துக் கொள்வது இன்றியமையாததாகும். இஸ்லாம் ஒரு முழுமையான வாழ்க்கைத்திட்டம். அது வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் வழிகாட்டி நிற்கின்றது. அதனைக் கூறு போடுவதும், அதன் ஒரு பகுதியை புறக்கணித்து விட்டு மற்றொரு பகுதியை அமுல்நடாத்துவதும் பிழையானது மாத்திரமன்றி எதிர்பார்த்த வெற்றியையும் பெற முடியாமல் போய்விடும். இந்த வகையில் இஸ்லாத்தை முழுமையாக ஏற்று அதனை முழுமையாகச் செயல்படுத்துவது பிரதானமானதாகும்.

இவ்வடிப்படையில் இஸ்லாத்தில் இருந்து இஸ்லாமிய பொருளியல் கோட்பாட்டை மாத்திரம் தனியாக இஸ்லாமல்லாத அல்லது பெயரளவில் அன்றி இஸ்லாத்தை காணமுடியாத ஒரு சமூகத்தில் செயற்படுத்த முயற்சிப்பதுவும் அல்லது நவீன பொருளாதார சிந்தனைகளுடன் அதனை இணைக்க முற்படுவதும் பிழையானதாகும்.

பொருளாதாரம் என்பது இஸ்லாத்தின் பல அடிப்படைகளில் ஒன்றாகும். அதன் ஏனைய அடிப்படைகளும் நடைமுறையில் உள்ள ஒரு சமூகத்தில் அதன் பொருளாதாரக் கொள்கை அமுல்படுத்தப்படும் போதே அது பூரண பயனளிக்கும். இல்லாத போது சில நன்மைகள் ஏற்படினும் குறைவுள்ளதாகவே அமையும்.

மேலும் மனிதன் ஆன்மா, உடல் என்ற இரு பகுதிகளைக் கொண்டவன் என்றவகையில் இவ்விரண்டிற்கும் மத்தியில் சமநிலையைப் பேணுவதன் மூலமே உண்மையான சுபீட்சத்தைக் காணமுடியும் என்பதும் இஸ்லாத்தின் ஓர் அடிப்படைக் கருத்தாகும். எனவே மனிதனது பொருளாதாரத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவது போலவே அவனது ஆத்மீகத் தேவைகளும் பூர்த்தி செய்யப்படல் வேண்டும் என அது வலியுறுத்துகின்றது. பொதுவாக பொருளியல் என்பது சட ரீதியிலான நிறைவைப் பற்றி ஆய்வதாக இருப்பினும் அது வாழ்வின் இலட்சியத்தை அடைவதற்கான ஒரு வழியேயாகும். உடலுக்குரிய தேவைகளைப் பூர்த்தி செய்வதே வாழ்வின் இலக்காக மாற முடியாது.

அடுத்து இஸ்லாம் தவ்ஹீதை அடிப்படையாக கொண்ட மார்க்கம் என்ற வகையில் அது ஷிர்க்கை அங்கீகரிப்பதில்லை. எனவே பொருளானது ஈமானை மிகைக்கும் நிலையை கண்டிப்பாக தவிர்க்க வேண்டுமென இஸ்லாம் எதிர்பார்க்கின்றது. பணத்தையும் பண்டத்தையும் தெய்வங்களாக பூஜித்து வணங்க அது அனுமதிப்பது இல்லை.

இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாட்டின் அடிப்படைகள்

இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாட்டின் அடிப்படைகளை இரு பகுதிகளாக பிரித்து நோக்குவர். அவையாவன:

   1. மாறாத் தன்மை வாய்ந்த (நிலையான) அடிப்படைகள்
   2. மாறும் தன்மை பெற்ற அடிப்படைகள்

இவை இரண்டையும் சற்று விளக்கமாக நோக்குவது பயனுள்ளதாய் அமையும்.

1. மாறாத் தன்மை வாய்ந்த (நிலையான) அடிப்படைகள்

   1. அனைத்து செல்வங்களும் வளங்களும் அல்லாஹ்வுக்குரியவையாகும். மனிதன் அவற்றில் அல்லாஹ்வின் பிரதிநிதியாவான்.

இது இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாட்டின் மிக முக்கியமான ஒரு விதியாகும். இவ்;விதிக்கு கீழ்வரும் அல்குர்ஆன் வசனங்கள் ஆதாராங்களாய் உள்ளன:

வானங்களிலும் பூமியிலும் உள்ளவைகள் அனைத்தும் அல்லாஹ்வுக் குரியவையே. (அந்நஜ்ம் : 31)

அல்லாஹ் உங்களுக்கு தந்துள்ள செல்வத்தில் இருந்து நீங்கள் அவர்களுக்கு கொடுங்கள். (அந்நூர் : 33)

உங்களை எதற்கு பிரதிநிகளாக்கினானோ அவற்றில் இருந்து செலவு செய்யுங்கள். (அல்ஹதீத் : 7)

2. சமூகத்தின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொறுப்பை ஏற்றல்:

அதாவது சமூகத்தில் உள்ள அனைத்துத் தனிமனிதர்களினதும் அடிப்படையான பொருளாதாரத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான உத்தரவாதம் அளிக்கப்படல் வேண்டும் என்பது இஸ்லாமிய பொருளாதார கோட்பாட்டின் மற்றுமொரு விதியாகும். இதனையே

அவர்களின் செல்வங்களில் குறிப்பிட்ட ஓர் உரிமையுண்டு. அது கேட்போருக்கும் கேட்காதோருக்கும் உண்டு. (அல்மஆரிஜ் : 24 - 25) எனும் குர்ஆன் வசனம் கூறுகின்றது.

இது பற்றி உமர் (ரழி) அவர்கள் கீழ்வருமாறு குறிப்பிட்டார்கள்:

வசதியற்றோரைப் பொறுப்பேற்பது எனது கடமையாகும். அத்தகையோர் (ஆட்சியாளன் என்ற வகையில்) என்னிடம் வரட்டும்.

3. சமூக நீதியைப் பேணுவதும் தனிமனிதர்களுக்கிடையிலான பொருளாதாரச் சமநிலையைப் பேணலும்.

இது பற்றி அல்குர்ஆன் கீழ்வருமாறு கூறுகின்றது:

செல்வம் செல்வந்தர்களுக்கு மத்தியில் மாத்திரம் சுழன்று வரக்கூடாது. (அல்ஹஷ்ர் : 7)

(ஸகாத்)செல்வந்தர்களிடமிருந்து பெறப்பட்டு அவர்களில் உள்ள ஏழைகளுக்கு வழங்கப்படல் வேண்டும் என்று நபி மொழி கூறுகின்றது.

4. தனியார் சொத்துரிமையை மதித்தல்

இவ்வடிப்படையை கீழ்வரும் சட்ட வசனங்கள் விளக்கி நிற்கின்றன:

ஆண்கள் சம்பாதித்தவை அவர்களுக்குரியதாகும். பெண்கள் தேடியவை அவர்களுக்குரியதாகும். (அந்நிஸா : 32)

திருடிய ஆணினதும் பெண்ணினதும் கைகளை வெட்டுங்கள். (அல்மாஇதா : 38)

ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அடுத்த முஸ்லிமின் இரத்தம் (உயிர்), பொருள், மானம் ஆகியவை ஹராமாகும். (நபிமொழி)

தனது செல்வத்திற்காக அதனைக் காக்கும் பாதையில் கொலை செய்யப்பட்டவன் ஷஹீதாவான். (நபிமொழி)

5. பொருளாதாரச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டதாய் அமைதல்

இவ்விதியின் அடிப்படையிலேயே இஸ்லாத்தில் பதுக்கல், வட்டி தொடர்பான பொருளாதார நடவடிக்கைகள் தடைசெய்யப்பட்டுள்ளன.

மனிதர்களின் பொருட்களை நியாயமற்ற முறையில் விழுங்காதீர்கள். (அல்பகரா : 188)

அல்லாஹ் வியாபாரத்தை ஆகுமாக்கி வட்டியை விலக்கியுள்ளான். (அல்பகரா : 275)

(முஸ்லிம்கள் மீது விலையேற்றத்தை கருத்திற் கொண்டு பொருட்களை) பதுக்குபவன் பாவியாவான். (அல்ஹதீஸ்)

இவை இவ்விதிக்கான சில ஆதாரங்களாகும்.

6. செலவீனங்களை ஒழுங்கு படுத்தி வீண்விரயத்தையும் ஆடம்பரத்தையும் தடுத்தல்

இவ்வடிப்படைக்கு ஆதாரங்களாக கீழ்வரும் சட்ட வசனங்களை குறிப்பிடலாம்.

நிச்சயமாக வீண்விரயம் செய்வோர் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள். (அல்இஸ்ரா : 7)

புத்தி குறைந்தவர்களாக இருந்தால் வாழ்க்கைக்கே ஆதாரமாக அல்லாஹ் அமைத்திருக்கும் உங்களிடம் இருக்கும் (அவர்களின்) செல்வங்களை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். (அந்நிஸா : 5)

இவை இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாட்டில் என்றும் நிலைத்திருக்கும் பிரதான விதிகள் ஆகும். இத்தகைய மாறாத் தன்மை வாய்ந்த விதிகளைக் கொண்டுள்ள இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாடு மாறும் தன்மையும் நெகிழ்ந்து கொடுக்கும் பண்பையும் கொண்ட சில அடிப்படைகளையும் கொண்டிருக்கிறது.

   1. மாறும் தன்மை பெற்ற அடிப்படைகள்

இவை நடைமுறையுடன் தொடர்பானவையாகும். அதாவது இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாட்டின் அடிப்படைகளை நடைமுறைப் படுத்தும் போது இஸ்லாமிய அறிஞர்கள் கைக்கொள்ளும் வழிமுறைகள், செயற்திட்டங்கள், தீர்வுகள் இப்பகுதியில் அடங்கும்.

வட்டியாக கருதப்படும் செயற்பாடுகளை தடைசெய்தல், வேதனத்திற்குரிய குறைந்தபட்ச அளவை தீர்மானித்தல், சமூக நீதியை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல், பொருளாதார நடவடிக்கைகளில் அரசின் தலையீட்டை தீர்மானித்தல், தனியுடமை, பொதுவுடமை ஆகியவற்றிற்கான துறைகளை வரையறுத்தல், பொருளாதார அபிவிருத்தி திட்டங்களை வகுத்தல் போன்ற (இஜ்திஹாத்) ஆய்வை வேண்டி நிற்கும் பகுதிகள் - நடைமுறை தொடர்பான அம்சங்கள் - மாறும் தன்மைக் கொண்டவையாகக் கருதப்படுகின்றன.

இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாட்டில் இவ்விரண்டாம் பகுதி ஆய்வுக்குரியது என்ற வகையில் கால சூழ்நிலைக்கேற்பவும் அறிஞர்கள் மத்தியில் சட்ட வசனங்களை விளக்குவதில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளுக்கு ஏற்பவும் மாறுபடும். 'கால மாற்றத்திற்கு ஏற்ப சட்டங்கள் மாறும் எனும் சட்ட விதி இம்மாறும் தன்மை பெற்ற அடிப்படைகளை குறித்து நிற்கின்றது.

எனவே, மாறாத் தன்மை வாய்ந்த இஸ்லாமிய பொருளாதார கோட்பாட்டின் அடிப்படைகளில் எத்தகைய வேறுபாடும் கொள்ளலாகாது. இவை எல்லாக் காலங்களுக்கும் இடங்களுக்கும் பொருத்தமான விதத்திலேயே அமைக்கப்பட்டுள்ளன. ஆயினும் மாறும் தன்மைப் பெற்ற விதிகளைப் பொறுத்தவரையில் அவை இஜ்திஹாதிற்குரியவையாகும். அவற்றில் கருத்து வேறுபாடு கொள்வது பிழையானதல்ல.

இந்த வகையில் இஸ்லாமிய பொருளாதார அமைப்பின் நடைமுறைகள் கால சூழ்நிலைகளைப் பொறுத்து வித்தியாசப்படலாம். உதாரணமாக ஏக காலத்தில் சவூதி அரேபியாவிற்கு ஒரு பொருளாதார நடைமுறையும் திட்டமும் குவைத்திற்கு வேறுபட்ட பொருளாதார செயல் திட்டமும் இருக்க முடியும்.

இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாட்டின் சிறப்பியல்புகள்

இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாடு தனித்துவமான பொருளியல்சார் விதிமுறைகளையும் நெறிமுறைகளையும் கொண்டிருப்பதற்கூடாக அது தனக்கே உரிய தனிப்பெரும் சிறப்பம்சங்களைப் பெற்றதாகவும் விளங்குகின்றது. இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாட்டில் குறிப்பிடத்தக்க கீழே விளக்கப்படுகின்றன.

   1. மாறும் தன்மையையும் மாறாத் தன்மையையும் ஏக காலத்தில் பெற்றிருத்தல்

இஸ்லாமிய பொருளாதார கோட்பாட்டின் அடிப்படைகளைப் பொறுத்தவரையில் அவை தெய்வீகமானவையாகும். அதன் நடைமுறைசார்ந்த துறையோ இஜ்திஹாத் - ஆய்வுக்குரியதாகும். இந்த வகையில் இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கை நிலையான ஒன்றாகவும் மாறும் - வளரும் ஒன்றாகவும் சமகாலத்தில் விளங்குகின்றது. அதாவது தெய்வீகமான பகுதி மாறாத் தன்மைப் பெற்றதாக இருக்க - ஆய்வுக்குரிய நடைமுறைப் பகுதி மாறும் தன்மையுடையதாய் விளங்கும்.

இச்சிறப்பம்சத்தின் காரணமாக இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கை எல்லாக் காலங்களுக்கும் எல்லா இடங்களுக்கும் பொருத்தமானதொன்றாக இருக்கும்.

மேலும் அதன் செயற்திட்டங்கள் கால மாற்றத்திற்கேற்ப மாறக்கூடியதாகவும் இருக்கும். என்றும் எப்போதும் ஒரு குறிப்பிட்ட அமைப்பிலேயே இஸ்லாமிய பொருளாதார அமைப்பின் நடைமுறைகள் இருக்கும் என கூறுவதற்கில்லை.

   1. தனிமனித நலனுக்கும் சமூக நலனுக்கும் இடையில் இணக்கம் காணல்

முதலாளித்துவம் போன்ற அமைப்புகள் தனிமனிதனை தமது இலக்காகக் கொண்டு அவனது நலனுக்கே முன்னுரிமை வழங்குகின்றன. சமூக நலனை விட தனிமனித நலனை முற்படுத்துகின்றன. இதனாலேயே அத்தகைய அமைப்புகள் தனிமனிதனுக்கு பொருளாதார நடவடிக்கைகளில் பூரண சுதந்திரத்தை வழங்குகின்றன.

தனிமனித நலனை கவனத்திற் கொள்ளும் போது மறைமுகமாக சமூக நலனும் நிறைவேறும்ளூ ஏனெனில் சமூகம் என்பது தனிமனிதர்களைக் கொண்ட ஒரு கூட்டமேயன்றி வேறில்லை என்பது முதலாளித்துவ வாதிகளின் வாதமாகும்.

முதலாளித்துவ அமைப்பினால் தனிமனித சுதந்திரம் கிட்டல், தனிமனித முயற்சிகளுக்கான உற்சாகமும் ஊக்கமும் கிடைத்தல் போன்ற சில அனுகூலங்கள் கிட்ட இடமிருப்பினும் பல பயங்கர பாதிப்புகளும் ஏற்படுகின்றன. உற்பத்தியின் போது அடிப்படைத் தேவைகளைக் கருத்திற் கொள்ளாது உச்ச இலாபத்தை மாத்திரம் கவனத்திற் கொள்ளல், வேலையில்லா திண்டாட்டம், சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மாத்திரம் வளங்களையும் செல்வங்களையும் பெறும் நிலை உருவாகுதல், பிழையான சொத்துப் பங்கீடும், வருமானப் பங்கீடும், பாரிய பொருளாதார ஏற்றத்தாழ்வு, வர்க்க பேதம், அதனால் தோன்றும் போராட்டங்கள் போன்றன முதலாளித்துவத்தின் பிரதிகூலங்களாகும்.

மறுபக்கத்தில் பொதுவுடமைப் பொருளாதார அமைப்பைப் பொறுத்தவரையில் அது சமூகத்தையும் சமூக நலனையும் இலக்காகக் கொள்கின்றது. தனிமனித நலனை விட சமூக நலனே பிரதானமானது என்பது அதன் வாதமாகும். எனவே அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகளிலும் அரச தலையீடு இருத்தல் வேண்டும். தனியார் சொத்துரிமை தடைசெய்யப்படல் வேண்டும் போன்ற வாதங்களை அது கொண்டுள்ளது. சமூக நலனைக் கவனிக்கும் போது தனிமனித நலன் தானாகவே பேணப்படும் என்பது பொதுவுடமை வாதிகளின் வாதமாகும்.

பொதுவுடமைக் கொள்கையில் பொதுத் தேவைகள் நிறைவேறுதல், வேலையில்லாப் பிரச்சினை தீர்தல், உற்பத்தி ஒழுங்கு படுத்தப்படல், பெரும்பாலானோரின் நலன் பேணப்படல் போன்ற சாதகங்கள் ஏற்பட இடமுண்டு. ஆயினும் தனிமனித ஊக்கம் குன்றல், அரசின் மறைமுகக் கட்டுப்பாடுகளுக்கு உற்படல், நிர்வாகக் கெடுபிடிகளுக்கு இலக்காகுதல் தனிமனித வாழ்வின் அடிப்படையான தனிமனித சுதந்திரம் பாதிப்படைதல் போன்ற பாதகங்கள் பொதுவுடமைக் கொள்கையினால் விளைகின்றன.

இஸ்லாமிய பொருளாதார கோட்பாடு இவ்விரண்டு அமைப்புகளில் இருந்தும் வேறுபட்டு தனித்துவமானதாகத் திகழ்கின்றது. அது தனிமனித நலனுக்கும் சமூக நலனுக்கும் இடையில் இணக்கம் காண்கின்றது. இஸ்லாத்தின் பார்வையில் இரண்டும் ஒன்றையொன்று பூர்த்தி செய்யும் விதத்தில் உள்ளன. இந்த வகையில் ஒன்றை பாதுகாப்பதிலேயே அடுத்ததன் நிலைப்பாடு தங்கியுள்ளது. எனவே தான் இஸ்லாம் இரு தரப்பு நலன்களையும் ஏககாலத்தில் கவனத்திற் கொள்கின்றது. அவற்றில் ஒன்றிற்காக மற்றயதை பலியிட அது விரும்பவில்லை.

ஆயினும் விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் (உதாரணம்: யுத்த வேளை, பஞ்ச காலம், தொற்று நோய்கள் பரவியுள்ள சந்தர்ப்பங்கள்) இரு தரப்பு நலன்களுக்கிடையில் இணக்கம் காண முடியாத வேளைகளில் பொது நலன்களுக்காக தனிமனித நலன்களை கவனத்தில் கொள்ளாமல் இருப்பதற்கு இஸ்லாம் தடை விதிப்பதில்லை.

தனிமனித, சமூக நலன்கள் ஏக காலத்தில் பேணப்படல் வேண்டும் என்ற இஸ்லாமிய பொருளாதார கோட்பாட்டின் கருத்தை விளக்கும் சில சட்ட வசனங்களை வருமாறு:

நீங்கள் அநியாயம் செய்யவும் கூடாது. அநியாயம் இழைக்கப்படவும் கூடாது. (அல்பகரா : 273)

ஆரம்பமாக தீங்கிழைக்கவும் கூடாது. அதற்குப் பதில் தீங்கு செய்யவும் கூடாது. (இப்னு மாஜா)

நடைமுறையில் இஸ்லாமிய பொருளாதார அமைப்பில் எவ்வாறு தனிமனித சமூக நலன் பேணப்படுகின்றது என்பது இங்கு நோக்கப்டல்; வேண்டும்.

முதலாளித்துவ அமைப்பில் தனிமனித ஆதிக்கமே மிகைத்து நிற்கும். பொதுவுடமை அமைப்பிலோ அரசின் ஆதிக்கமே மேலோங்கி இருக்கும். ஆனால் இஸ்லாமிய அமைப்பில் தனிமனித சுதந்திரமும் அரசின் தலையீடும் சம அளவில் இருக்கும். ஒன்று மற்றயதைச் சார்ந்து பூர்த்தி செய்யும் விதத்தில் இருக்கும். இரண்டும் அடிப்படைகளாகவே கொள்ளப்படும். இரண்டில் ஒன்று அடிப்படையாகவும் மற்றையது விதிவிலக்காகவும் கொள்ளப்படுவதில்லை.

இஸ்லாம் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட தனிமனிதர்களுக்கு சுதந்திரம் வழங்கும் போது சில கட்டுப் பாடுகளையும் விதிக்கின்றது. உதாரணமாக போதைவஸ்த்துக்களை உற்பத்தி செய்தல், வட்டி அடிப்படையிலான கொடுக்கல் வாங்கலில் ஈடுபடல், பதுக்கல், செல்வத்தை உற்பத்தியில் ஈடுபடுத்தாது தேக்குதல் அல்லது அர்த்தமற்ற முறையிலோ பிறருக்கு தீங்கேற்படும் விதத்திலோ பொருளை கையாள்தல், பொருட்களை நியாயமற்ற, மிதமிஞ்சிய விலையில் விற்பனை செய்தல் போன்றன விலக்கப்பட்டவையாகக் கொள்ளப்படுகின்றன.

நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளின் சீர் நிலையைக் கண்காணிக்க விஷேட ஒரு பிரிவை இயக்குவது இஸ்லாமிய அரசின் கடமைகளில் ஒன்றாகும். இக்கண்காணிப்புப் பிரிவை (அல்ஹிஸ்பா) என இஸ்லாமிய வழக்கில் அழைப்பர்.

மேலும் இஸ்லாமிய பொருளாதார அமைப்பில் தனியார் துறையினர் பர்ளு கிபாயா என்ற வகையில் ரயில் பாதைகளை அமைத்தல், கனரக உற்பத்திகளுக்கான தொழிற்சாலைகளை அமைத்தல் போன்ற துறைகளில் ஈடுபடாத போது அல்லது இலாபமீட்டித் தராத, யுத்த ஆயுதங்களை உற்பத்தி செய்தல், பாடசாலைகள், ஆஸ்பத்திரிகள் அமைத்தல் போன்ற முயற்சிகளில் ஈடுபடத் தவறும் போது அத்தகைய பணிகளை மேற்கொள்வது இஸ்லாமிய அரசின் கட்டாய கடமையாக (பர்ளு ஐன்) மாறிவிடுகின்றது.

நாட்டுப் பிரஜைகளின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொறுப்பை இஸ்லாம் ஏற்றுள்ளது என்ற வகையில் இவ்விடயத்தில் அரச தலையீடு தவிர்க்க முடியாததாக இருக்கின்றது. இந்த வகையிலேயே ஸகாத் நிறுவன அமைப்பை இஸ்லாம் அறிமுகம் செய்துள்ளது. அது முழுமையாக அரசின் கையிலேயே இருக்கும்.

மேலும் சமூகத்தில் பொருளாதாரச் சமநிலை, சொத்து, வருமான பங்கீட்டில் நீதி போன்றவற்றை பேணி செல்வமானது ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் கைகளில் மாத்திரம் சுழன்று வரும் நிலையைத் தவிர்க்கவும் அரச தலையீடு அவசியப்படுகின்றது.

பனூ அந்நளீர் கோத்திரத்தவர்களிடம் இருந்து கிடைத்த சுங்க வரியை அன்ஸாரிகளை விட்டு விட்டு முஹாஜிர்களுக்கு மத்தியில் நபி (ஸல்) அவர்கள் பகிர்ந்தளித்தமை பொருளாதார சமநிலையைப் பேண அரசு எடுக்கும் நடவடிக்கை தொடர்பானதாகும். இந்த அடிப்படையிலேயே சில சூழ்நிலைகளில் நபியவர்கள் விவசாய நிலங்களை குத்தகைக்கு - கூலிக்கு விடுவதனையும் தடை செய்திருந்தார்கள்.

சொத்துரிமை விடயத்தில் உற்பத்திக் காரணிகள் அடிப்படையில் தனியாருக்கு சொந்தமானவை என்பது முதலாளித்துவத்தின் கருத்தாகும். பொதுவுடமை அமைப்பில் உற்பத்திக் காரணிகள் அனைத்தும் அரசுக்குச் சொந்தமானவை என்பதே அடிப்படையாகும். இரு அமைப்புக்களிலும் குறித்த நிலைகளுக்கு மாற்றமாக சில துறைகள் அமைவது விதிவிலக்கானதாகவே இருக்கும்.

ஆனால் இஸ்லாமிய அமைப்பில் தனியுடமை, பொதுவுடமை ஆகிய இரண்டும் இணைந்த ஒரு நிலையையே அவதானிக்கக் கூடியதாய் உள்ளது. இரண்டும் அடிப்படைகளாகவே கொள்ளப்படுகின்றன. ஒன்றும் விதிவிலக்கானதல்ல. அவ்வாறே இரண்டும் வரையறைகளுக்கு உட்பட்டதாகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகவும் இருக்கும்.

தனியாருக்கு சொத்துக்களை வைத்திருக்கும் உரிமை இருப்பினும் அடிப்படையில் செல்வங்கள் அனைத்தும் அல்லாஹ்வுடையவை. மனிதர்கள் அவற்றில் அவனின் பிரதிநிதிகள் என்றவகையில் இஸ்லாமிய வரையறைகளுக்கு ஏற்பவே அவற்றை கையாளவும் பயன்படுத்தவும் வேண்டும். இல்லாத போது அரச தலையீடு அவசியப்படும்.

மேலும் சில சொத்துக்கள் கண்டிப்பாக அரச கையில் இருக்கும். உதாரணமாக: வக்பு சொத்துக்கள், கனிப்பொருள் வளங்கள், கைப்பற்றப்பட்ட நிலப் பிரதேசங்கள் போன்றவை அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும்.

செல்வப் பங்கீட்டில் முதலாளித்துவ அமைப்பானது தனியார் சொத்துரிமையை அடிப்படையாகக் கொள்ள - சமவுடமை அமைப்பு உழைப்பை அடிப்படையாகக் கொள்கின்றது. ஆனால் இஸ்லாமிய அமைப்பில் பங்கீட்டின் போது தேவையே அடிப்படையாகக் கொள்ளப்படும். அதனையடுத்து உழைப்பும் தனியார் சொத்துரிமையும் கவனத்திற் கொள்ளப்படும்.

   1. மனிதனின் பொருளாதாரத் தேவைகளையும் ஆன்மீகத் தேவைகளையும் சமகாலத்தில் கவனத்திற் கொள்ளல்

இதுவும் ஏனைய பொருளாதார அமைப்புக்களில் காணப்படாத ஒரு சிறப்பம்சமாகும். பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் இறைதிருப்தியை நாடல், (அமல்) நற்கருமங்களில் ஈடுபடுகின்ற உணர்வை பெறல் போன்றன இஸ்லாமிய பொருளாதார அமைப்பில் மாத்திரம் அவதானிக்கப்படும் தனிப்பெரும் சிறப்பம்சங்களாகும்.

இவ்வமைப்பில் அரசின் கண்காணிப்பிற்கு மாத்திரமன்றி இறைவனின் கண்காணிப்பிற்கும் அஞ்சுவோராகவே உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் இருப்பர். மேலும் இங்கு உற்பத்தியில் வெறும் இலாபம் இலக்காக கொள்ளப்படல் மாட்டாது. கடமையில் ஈடுபடும் உணர்வே மிகைத்து நிற்கும்.

   1. தெய்வீகத்தன்மை

இவை அனைத்துக்கும் மேலாக இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாடு தெய்வீகமானதாகத் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்க ஒரு சிறப்பியல்பாகும். அதாவது ஏனைய அனைத்து பொருளாதார அமைப்புகளும் சாதாரண மனிதர்களின் சிந்தனையிலிருந்து பிறந்தவையாக இருக்க இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாடோ எல்லாம் வல்ல இறைவனிடம் இருந்து பெறப்பட்டதாய் உள்ளது.

ஏனைய பொருளாதார சிந்தனைகளில் மனித பலவீனங்களின் வெளிப்பாடுகளை காணக்கூடியதாய் உள்ளன. ஆனால் இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாட்டில் அத்தகைய பலவீனங்களின் பாதிப்புக்களுக்குப் பதிலாக நிறைந்த ஞானம், முக்காலம் பற்றிய அறிவு, சம்பூரணத்துவம் போன்ற இறைவனது பண்புகளின் வெளிப்பாடுகளையே அவதானிக்க முடியும்.

உலக பொருளாதாரம்

Articleமனிதர்களின் பெரும்பாலான நேரத்தைப் பொருளாதாரச் சிந்தனைகளும், செயல்களும் ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கின்றன. பொருளை சம்பாதிப்பது, செலவிடுவது, சேமிப்பது, வாரிசுகளுக்கு விட்டுச் செல்வது போன்ற சிந்தனைகளில் மனிதன் மூழ்கிக் கிடப்பதை காண முடிகின்றது.

உலகளாவிய அளவில் வறுமை, வேலையின்மை, பஞ்சம், பற்றாக்குறை, ஏற்றத்தாழ்வு போன்றவற்றினால் பல நாடுகள் துயருற்றிருக்கின்றன. மனிதர்களை பெருமளவில் கொல்லுகின்ற ஆயுதங்கள் உற்பத்தி, போதைப்பொருள் உற்பத்தி, ஓழுக்கக்கேடான செயல்கள், அடக்குமுறை போன்ற பல காரணங்களினால் மனித குலத்தை பெரிதும் பாதிக்கின்றன.

பொருளாதார சிந்தனை
பொருளியல் சிந்தனைகள் மனித வரலாற்றில் அன்று முதல் இன்று வரை வளர்ந்து வந்திருக்கிறது. மனிதன் படைக்கப்பட்டதிலிருந்து பொருளாதார முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, அவற்றிக்கு ஏற்றவாறு சிந்தனையும் மாறி வந்திருக்கிறது. ஆதிகாலத்து மனிதர்களும் தங்கள் பொருளியல் தேவைகளை நிறைவேற்றியுள்ளனர். விவசாயம் செய்யப்பட்டது, உடைகள் தயாரிக்கப்பட்டன, பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டது, செல்வம் சேமிக்கப்பட்டது அத்தகைய சூழ்நிலைகளில் பொருளாதார சிந்தனை மேலும் வளர்ந்து பரிணாமம் அடைந்தது.

இன்றைய பொருளாதார கோட்பாடுகள்
இன்று ஒவ்வொரு நாடும் வெவ்வேறு பொருளாதார கோட்பாடுகளை பின்பற்றி வருவதை காண்கிறோம். ஒவ்வொரு நாடும் வெவ்வேறான பொருளாதார கோட்பாடுகளை பின்பற்றும்போது நாடுகளுக்கிடையே வேற்றுமை உருவாகிறது. பிரச்சினைகள் தோன்றுகின்றது.

இன்று உலகில் நிலவுகின்ற எல்லா பொருளியல் கோட்பாடுகளும் ஒரு சில நாட்டின் நன்மைக்காக, சில பிரச்சினைகளை போக்குவதற்காக பொருளியல் சிந்தனையாளர்களால் உருவாக்கப்பட்டன. அவ்வாறு உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறிய பிறகு அத்தத்துவங்களும் செயல் இழந்து விட்டன.

மேலும் ஒரு நாட்டிற்கு பயனளித்த பொருளாதார திட்டம் மற்றொரு நாட்டிற்கு தீங்கு அளித்த உதாரணங்கள் ஏராளமாக இருக்கின்றன. உதாரணமாக, இங்கிலாந்து நாட்டிற்கு வாழ்வளித்த ஆடம்ஸ்மித் கோட்பாடுகள் ஜெர்மன் நாட்டிற்கு பேரிழப்பாக அமைந்தது.

மனிதர்களால் உருவாக்கப்பட்ட உலக பொருளாதாரம்
மனிதர்கள் தாங்கள் வாழ்கின்ற சூழ்நிலைக்கு ஏற்ப பொருளாதார திட்டத்தை சுய சிந்தனை மூலம் உருவாக்கி வாழ்கின்றபோது நாட்டிற்கு நாடு அது மாறுபடுகின்றது. அதனால் பிரிவு உண்டாகிறது சுயநலம் தோன்றி உலக மக்கள் சண்டையிட்டுக் கொள்ள நேரிடுகிறது. மனித வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.

மனிதர்களால் உருவாக்கப்படுகின்ற பொருளாதார திட்டம் எந்த அளவிற்கு உலக மக்களுக்கு வழிகாட்டியாய் இருக்க முடியும் என்பதும் அடுத்த கேள்வி. ஏனெனில் மனிதர்கள் சிந்திக்கும் திறனுக்கு ஓர் எல்லையுண்டு. எதிர்காலத்தில் மாறும் தேவைகளுக்கு ஏற்ப எவராலும் நீண்ட, நிலைத்த பொருளாதார கொள்கையை உருவாக்கிட இயலாது. இதனை கடந்த கால வரலாறு தெளிவாக மெய்பித்து இருக்கிறது.

ஏறத்தாழ 80 ஆண்டுகள் உலகை தனது கைப்பிடியில் வைத்திருந்த கம்யூனிசக் கொள்கை இன்று அழிந்து விட்டது. மேலும் எந்த ஒரு பொருளாதாரக் கொள்கையும் பெரும் மாறுதலுக்கு உள்ளாகாமல் இருந்ததில்லை. இதனால் காலத்திற்கு ஏற்ப பொருளியல் தத்துவங்கள், கொள்கைகள், நடைமுறைகள், நிறைவு பெறாமலேயே இருந்து வருகின்றன. புதுப்புது கொள்கைகள் மனித சமுதாயத்தின் மீது ஒவ்வொரு காலகட்டத்திலும் சோதித்துப் பார்க்கப்படுகின்றன.

உலகின் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களின் விருப்பத்திற்கு உள்நோக்கத்திற்கு வசதியாக பிற மக்களின் மீது தங்களின் பொருளாதாரத் கருத்துக்களைத் திணித்து வருகின்றனர் என்பதே முற்றிலும் உண்மை. புதிதாக ஒரு கருத்து உருவாகும் போது அது எல்லோருக்கும் நன்மையளிக்கக்கூடியது என்று விளம்பரம் செய்யப்படுகிறது.

மோசமான பாதிப்பு ஏற்படுகின்ற போது அக்கருத்தை உரியவர்கள், நடைமுறை படுத்தியவர்கள் ஒன்று உயிருடன் இருப்பதில்லை அல்லது அவர்கள் அதைப்பற்றி கவலைப்படுவதுமில்லை. பாதிப்புக்கு உள்ளான மனிதர்களுக்கு துன்பம் எவ்வகையிலும் துடைக்கப்படுவது இல்லை. எத்தகைய இழப்பீடும் கொடுக்கப்படுவது இல்லை. அவ்வாறென்றால் யார் மனிதர்களின் பொருளியல் வாழ்க்கைக்குத் தேவையான கோட்பாடுகளை அறிவிக்கக்கூடும் என்ற கேள்வி எழுகின்றது.

எவனால் இவ்வுலகு தோற்றுவிக்கப்பட்டதோ, எவன் இவ்வுலகில் ஓர் இயற்கைத் தன்மையை ஏற்படுத்தி ஒழுங்குபடுத்தியிருக்கின்றானோ எவனின் அறிவுரை உலக மக்கள் அனைவருக்கும் நன்மையளிக்கக் கூடியதாக இருக்குமோ, அவனே தான் பொருளாதார வாழ்க்கைக்கு வழிகாட்டக்கூடியவன் ஆவான். அவ்வகையில் இவ்வுலகைப்படைத்த அந்த ஓர் இறைவன் தான் வழிகாட்டத் தகுதியானவன் அவனது வழிகாட்டுதல் தான் நேரிய வழியாகும் இக்கருத்தை இங்கிலாந்து நாட்டு பொருளியல் நிபுணர் ஆடம்ஸ்மித் தமது நூலில் வலியுறுத்தியிருக்கிறார்.

எனவே, இறைவன் உருவாக்கிய இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாடுகளைப் பற்றி நாம் அறிய வேண்டியது அவசியமாகிறது.

இஸ்லாமிய பொருளாதாரம்
நாம் வாழும் இவ்வுலகைப் படைத்து, அதில் மனிதர்கள் பிற உயிரினங்கள் வாழ்வதற்கு வசதியை உண்டாக்கிய அல்லாஹ், மனிதர்கள் அமைதியாகவும், செழிப்புடனும் வாழ்வதற்கு தேவையான வாழ்க்கை நெறிமுறைகளையும் பொருளாதாரத் திட்டங்களையும் அவனது திருத்தூதர்(ஸல்) அவர்கள் மூலம் அறிவிக்கின்றான்.

அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்
பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள் நீங்கள் சித்தியடையும் பொருட்டு அடிக்கடி அல்லாஹ்வை நினைவுக் கூறுங்கள். (அல்குர்ஆன் 62:10)

(மனிதர்களே!) நிச்சயமாக நாம் உங்களுக்கு பூமியில் சகல வசதிகளையும் அளித்து அதில் உங்களுக்கு வாழ்க்கை வசதிகளையும் ஏற்படுத்தினோம் (இவ்வாறிருந்தும்) நீங்கள் நன்றி செலுத்தவதோ வெகு சொற்பம். (அல்குர்ஆன் 7:10)

நீங்கள் உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருள்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள் (அல்குர்ஆன் 2:188)

இன்னும் இது போன்ற பல வசனங்களில் பொருளாதாரத்தைப் பற்றி நமது இறைவன் கூறுகிறான்.

இன்றைய தேவை இஸ்லாமிய பொருளாதாரம்
இஸ்லாமிய பொருளாதாரப் கோட்பாடுகள் கடந்த காலத்தில் பல அரிய சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது. எடுத்துக்காட்டாக வறுமை ஒழிப்புத்திட்டத்தை மேற்கொண்டு ஜகாத் மூலம் ஏழைகளுக்கு முறையாக விநியோகித்து அது வெற்றியும் பெற்றுள்ளது.

வாணிப நெறிமுறைகள் சீரிய முறையில் கையாளப்பட்டுத் தடையில்லா வர்த்தகம் நடைபெற உதவியுள்ளது. வட்டியினை முழுமையாக ஒழித்துப் பொருளாதாரத் துறை தடையில்லாமல் எளிதாகச் செயல்பட ஏற்பாடு செய்தது.

சில சீர்திருத்தச் சட்டங்கள் செம்மையாகவும், இயற்கையாகவும் அமல் செய்ததன் மூலம் விவசாய உற்பத்தி பெருகி விவசாயிகள் தங்கள் பொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கச் செய்தது. கடன், கொடுக்கல், வாங்கல் சீர்திருத்தம் செய்யப்பட்டது.

முதன்முதலாக பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட்டதன் மூலம் பெண்களின் சமூக பொருளாதார முன்னேற்றம் ஏற்பட வழிவகுத்தது. நியாய விலை, நியாயமான கூலி, பொருளாதார நீதி போன்றவை முதன்முதலாகச் செயல் வடிவம் கொடுக்கப்பட்டன.
மேற்கூறிய அனைத்திலும் உலக வரலாற்றில் முதன்முதலாகச் செயல்வடிவம் கொடுக்கப்பட்டது எதுவோ, அதுதான் இஸ்லாமிய பொருளாதார திட்டங்களாகும்.

பல அறிஞர்கள் மாபெரும் ஆராய்ச்சி மூலம் உண்டாக்கிய உலக பொருளாதார திட்டங்கள் ஏற்படுத்திய பேரழிவு மற்றும் துன்பங்கள் ஆகியவற்றை உணர்ந்த பின், மனித குலத்திற்கு ஒரே காலத்தில் நன்மையளிக்கக்கூடிய திட்டங்கள் காணப்பெறாமல் தத்தளித்ததுக் கொண்டிருக்கிற இக்காலத்தில், இஸ்லாமிய பொருளாதாரம் சோதனையாக அளிக்கப்படுகிறது. இதன் செயல்பாட்டினை அறிவுக் கண் கொண்டு வல்லுநர்கள் ஆராயட்டும். மக்களுக்கு நன்மையளிப்பதாக இருந்தால் ஏற்றுக் கொள்ளட்டும். ஆனால் ஆராயும் முன் மனக்கோணல் இல்லாமல் உண்மையை உள்ளபடி தெரிந்து கொள்ளும் நல்ல நோக்கத்துடன் ஆராய்ந்து தெளிவு பெற்றுக் கொள்ளும் படி வேண்டிக் கொள்கிறேன்.

நன்றி: சுவனப்பாதை மாதஇதழ்